loader

தீராத ஒற்றைத் தலைவலியினால் அவதியுறுகிறீர்களா??

இதோ உங்களிற்கான ஒரு பதிவு!!

இன்று பல தரப்பினர் இடையேயும் காணப்படும் பொதுவான ஒரு நோயாக இவ் ஒற்றைத் தலைவலி திகழ்கிறது. முதலில் ஒற்றைத் தலைவலி என்றால் என்ன என்று நோக்குவோம்.

இத் தலைவலியானது தலையின் ஒற்றைப் பக்கம் மட்டுமே உணரப்படும். ஆனால், தலைவலி உணரப்படும் பக்கங்கள் தலையில் மாறி மாறி உணரப்படலாம். இதுவே இதன் பிரதான அறிகுறி ஆகும்.

ஒற்றைத் தலைவலி ஒரு நரம்பியல் சார்ந்த நோயாகும். இதன் அடிப்படையான காரணிகள் அறியப்படாத போதிலும் பரம்பரைக் காரணிகள் மற்றும் சுற்றாடல் காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. இங்கு பரம்பரைக் காரணிகள் என்பது யாதெனில், ஒரு நோயானது பரம்பரை வாயிலாகக் அதாவது தந்தை வழி அல்லது தாய் வழி உறவுகள் மூலம் கடத்தப்படுவதாகும். மேலும், சுற்றாடல்க் காரணிகள் எனப்படும் போது அதில் நமது உணவுப் பழக்கங்கள் மற்றும் நமது செயற்பாடுகள் என்பன அடங்கும்.

சாக்கலேட், மதுபானங்கள், பால்க்கட்டி, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பாவனையும் இந் நோயினை ஏற்ப்படுத்தலாம். மேலும், மன அழுத்தம் போன்ற காரணிகளும் இந் நோயை ஏற்படுத்துவதில் தாக்கம் செலுத்துகின்றது. பெரும்பாலும் இந் நோய் ஆண்களைக் காட்டிலும் பெண்களிற்கே அதிகம் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக பெண்களில் நிகழும் ஹோர்மோன்களின் மாற்றத்தினால் (பூப்படைதலின் போது) ஏற்படும். மேலும், காலநிலை மாற்றங்கள், சில மருந்துகள், தூக்க முறையில் ஏற்படும் மாற்றங்கள் என்பனவும் தாக்கம் செலுத்துகின்றன.

பொதுவாக இந் நோயானது நான்கு படிமுறைகளில் நிகழும். ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களிற்கு முன் மலச்சிக்கல், மன அழுத்தம் போன்ற மன நிலை மாற்றங்கள், கழுத்துப் பிடிப்பு, தொடர்ச்சியான கொட்டாவி, அதிக நீர்த் தாகம், மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் இதன் முதற் கட்டத்தில்த் தென்படலாம்.

அடுத்த கட்டம் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு முன்னர் அல்லது ஒற்றைத் தலைவலியின் போது ஏற்படும். இக் கட்டத்தில் ஏற்படும் அறிகுறிகள் பொதுவாக இருபது முதல் அறுபது நிமிடங்கள் வரை நீடித்து பின் மீண்டும் சாதாரண நிலையை அடையும். இதில் புள்ளிகள் தென்படுதல், பிரகாசமான ஒளி தென்படுதல், இருள் போன்ற உணர்வு, கை, கால்களில்க் குத்துவது போன்ற உணர்வு, முகம் அல்லது உடம்பின் ஒரு பக்கத்தில் விறைப்புத்தன்மை அல்லது சோர்வு, வெவ்வேறு ஒலிகள் கேட்டல், கட்டுப்படுத்த முடியாத அசைவுகள் அல்லது நடுக்கம் போன்றவை ஏற்படலாம்.

அடுத்த கட்டமே பிரதானமாக ஒற்றைத் தலைவலி உணரப்படும் கட்டமாகும். பெரும்பாலும் இங்கு ஏற்படும் தலைவலி குத்து வலி அல்லது துடிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும். இது ஏற்படுத்தும் தாக்கமானது சில மணித்தியாளங்கள் தொடக்கம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை நீடிக்கலாம். இத் தலைவலியானது தலையின் ஒரு பக்கம் மட்டுமல்லாது கண், புருவம், காது, கழுத்துப் பகுதிகளிலும் வலியை ஏற்படுத்தக் கூடியது. மேலும், இவ் நோயானது ஒரு குறிப்பிட்ட கால ஒழுங்கமைப்பில் உருவாகும். ஆனால், நோய் உருவாகும் கால ஒழுங்கமைப்பு நோயாளியிற்கேற்ப மாறுபடும்.

இவ் ஒற்றைத் தலைவலி குமட்டல், வாந்தி, ஒலி, ஒளி போன்றவற்றிற்கு அதிக உணர்ச்சி போன்ற அறிகுறிகளையும் தலைவலிக்கு மேலதிகமாக வெளிப்படுத்தும்.

இவ் ஒற்றைத் தலைவலியின் தீவிரம் லேசானது முதல் அதி தீவிரம் வரையில் மாறுபடலாம். பொதுவாக நோயின் தீவிரம் உடலை ஈடுபடுத்திச் செய்யப்படும் வேலைகளினால் அதிகரிக்கலாம்.

நான்காவது கட்டம் ஒற்றைத் தலைவலியின் பின்னர் வருவது. இதில் களைப்பு, தூக்கக் கலக்கம் ஏற்பட்டு உடலானது மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பும்.

ஒற்றைத் தலைவலியினை பல நூற்றாண்டுகளிற்கு முன் தோன்றிய ஆயுர்வேத சிகிச்சை முறை மூலமும் நமது அன்றாட பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமும் குணப்படுத்த முடியும்.

எந்த நோயானாலும் அதற்கான முதற் தீர்வு, நோயை ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து விடுபடுவதே ஆகும். எனவே, ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தக் கூடிய சாக்கலேட், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானம், செயற்கை இனிப்பூட்டிகள், பதப்படுத்தப்பட்ட பால்க் கட்டி போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும், கீரைகள், பாறை மீன், சூரை மீன், அவகடோ, தானியங்கள், முட்டை போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளல். இவை நோயைக் கட்டுப்படுத்துவதில் உதவி புரியும்.

இவற்றைத் தவிர நசியம், ஸ்நேக பானம், ஸ்வேதனம், ஷிரோவிரேசணம், வஸ்தி, தூம பிரயோகம், ஆலேபனம் போன்ற ஆயுர்வேத சிகிச்சை முறைகள் மூலமும் ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்தலாம்.

Leave a Reply