
இன்றைய மனித சனத்தொகையில் பொதுவாகக் காணப்படும் நோய்களில் ஒன்றே கொலஸ்டிரால் ஆகும். சாதாரணமாகக் கொலஸ்டிரால் எனப்படுவது, நமது உடலில்க் காணப்படும் ஒரு வகை மெழுகு போன்ற பதார்த்தமாகும். இது நமது உடலின் அன்றாட செயற்பாட்டிலும், உடற் கட்டமைப்பு உருவாக்கத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றது. இக் கொலஸ்டிரோலின் அளவு, குருதியில் சாதாரண அளவை விட அதிகரிக்கும் பொழுதே அது கொலஸ்டிரால் நோயாக உருவெடுக்கின்றது.
முக்கியமாக இரண்டு வகையான கொழுப்புக்கள் நமது உடலில்க் காணப்படுகின்றது. இதில் நல்ல கொழுப்பு எனப்படுவது உடலிற்கு நன்மை தரக் கூடியது, கெட்ட கொழுப்பு உடலிற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது ஆகும். எனவே, இவ் இரண்டு கொழுப்புகளையும் அவற்றின் சராசரி அளவுகளில்ப் பேணுவதன் மூலம் கொலஸ்டிரால் நோய் உருவாவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்க முடியும். சாதாரணமாக குருதியில் மொத்த கொலஸ்டிராலின் அளவு 200 mg/dl ஐ விடக் குறைவாகவும், கெட்ட கொழுப்பு (LDL) 100 mg/dl ஐ விடக் குறைவாகவும், நல்ல கொழுப்பு (HDL) 60mg/dl ஐ விட அதிகமாகவும் காணப்பட வேண்டும்.
இக் கொலஸ்டிரோல் நோயானது பரம்பரை அலகுகளினால்க் கூடக் கடத்தப்படக் கூடியது. எனினும், நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் நமது வாழ்க்கை நடைமுறைகளும் இவ் நோய் உருவாக்கத்தில்ப் பெரிதும் பங்கு வகிக்கின்றன .
தற்பொழுது உள்ள நவீன மயப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையில் பெரும்பாலும் அனைவரும் ஒரு வேளை உணவையாவது உணவகங்களிலேயே எடுக்கின்றனர். இதுவே கொலஸ்டிரால் உருவாக்கத்தில்ப் பெரிதும் பங்கு வகிக்கின்றது. அதிக எண்ணெய் அடங்கிய உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பீட்சா, பர்கர், பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதினால் இந் நோய் உருவாக முடியும். மேலும், சிகரெட், மது பாவனை, மன அழுத்தம் போன்ற காரணிகளும் கொலஸ்டிரால் உருவாக்கத்தில்ப் பெரிதும் பங்கு வகிக்கின்றன . இவற்றைத் தவிர உடற்பயிற்சி போதாமை, சொகுசு வாழ்க்கை முறை, உடலில்க் காணப்படும் சில நோய்களின் மூலமும் இந் நோய் உருவாகலாம்.
ஏனைய நோய்களைப் போன்று இந் நோயானது குறிப்பிடத்தக்க அளவு நோய் அறிகுறிகளைக் காட்டாது. எனினும், அதிக கொழுப்பினால் ஏற்படும் இரத்த உறைவினால் தசைப்பிடிப்பு, அவயவங்களில் வலி மற்றும் விறைப்புத்தன்மை, தோல்களின் கீழ் கொழுப்பு படிதல் என்பன ஏற்படலாம். மேலும் சிலரில் உடற்பருமன் அதிகரிப்பு, அதிக களைப்பு (பேசும் போது அல்லது அன்றாட வேலைகளில் ஈடுபடும் பொழுது) போன்ற அறிகுறிகளும் காணப்படலாம். இவற்றைத் தவிர மாரடைப்பு போன்ற அபாய நிலைகளையும் ஏற்படுத்தக் கூடியது. எனவே, கொலஸ்டிரோலினை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது மிக முக்கியமானதாகும். குருதியிலுள்ள கொலஸ்டிராலின் அளவைக் குருதிப் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறிய முடியும். இதற்காக , 10 தொடக்கம் 12 மணித்தியாலங்கள் உணவு மற்றும் நீர் தவிர்த்து இப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
கொலஸ்டிரால் பாரிய விளைவை ஏற்படுத்தக் கூடியது என்பதால் தகுந்த நேரத்தில் பொருத்தமான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதற்கான பல தீர்வுகள் ஆயுர்வேதத்தில் இலகு முறைகளில் உண்டு. வெளியக சிகிச்சைகளான வஸ்தி, விரேசணம், நசியம் போன்ற பஞ்ச கர்ம சிகிச்சைகள் காணப்படுகின்றன . அவற்றின் மூலம் முதலில் நமது உடல் அகத்திலிருந்து சுத்திகரிக்கப்படும். இவற்றைத் தவிர ; கசாயம், குளி, வட்டி, குக்குலு, கல்கம், சூரணம் போன்ற உள்ளக மருந்துகளும் உள்ளன . மேலும் கொலஸ்டிரால் உருவாக்கத்தில் மன நிலைகளும் தாக்கம் செலுத்துவதால், அவற்றைத் தீர்ப்பதற்கு தியானம், ப்ராணாயாமம், யோகா போன்றவையும் உண்டு.
எந்த நோயானாலும் அதிலிருந்து குணமடைவதற்கு சிகிச்சைகள் மட்டும் போதாது. அந்த நோயானது உருவாக்கப்படும் காரணிகளை நாம் புறம் தள்ள வேண்டும். முதலில் நமது உணவுப்பழக்கவழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். உடலிற்கு நன்மை பயக்கக் கூடிய மரக்கறிகள், பழங்கள், கீரைகள் என்பவற்றை அதிகளவில் சேர்த்து ஒரு முழு உணவை உட்கொள்ள வேண்டும். அதிக எண்ணெய், தேங்காய்ப்பால் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட , பொறித்த உணவுகள், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள், பேக்கரி உற்பத்திகள் என்பவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும், சிகரெட், மது பாவனை என்பவற்றையும் தவிர்த்திட வேண்டும். மன அழுத்தங்கள் போன்றவற்றிலிருந்து விடுபட தியானம், மெல்லிசைகளைக் கேட்டல் போன்றவற்றில் ஈடுபடலாம். இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் குருதியின் கொலஸ்டிரால் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.
கொலஸ்டிரால் அற்ற நீண்ட நலமான வாழ்வினை ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியுடன் பெற்றிடுங்கள்.