loader

உடலில் மிக முக்கியமான ஒரு அங்கமே கல்லீரல் ஆகும். இது எமது வயிற்றின் வலது புறத்தில்க் காணப்படுகின்றது. இக் கல்லீரல் ஆனது உணவு சமிபாட்டுடனும், நச்சுப் பதார்த்தங்களை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நமது கல்லீரலில் அதிகளவிலான கொழுப்பு படியும் பொழுது அது கொழுப்பு கல்லீரல் நோயாகக் கருதப்படுதின்றது.

இக் கொழுப்பு கல்லீரல் நோயானது இரண்டு வகைகளில் உண்டு. ஒன்று மதுபானம் சார்ந்த கொழுப்பு கல்லீரல் மற்றையது மதுபானம் சாராத கொழுப்பு கல்லீரல். இதில் மதுபானம் சார்ந்த கொழுப்பு கல்லீரல் ஆனது அதிகளவான மதுபாவனையின் காரணமாக ஏற்படுகின்றது. மற்றைய வகை மதுபானத்தின் அளவை சாராது வேறு காரணிகளால் உருவாக்கப்படுவது ஆகும்.

கொழுப்புக் கல்லீரல் ஆனது மதுபானப் பாவனையினால் ஏற்படக்கூடியதாயினும் வேறு சில காரணிகளும் கொழுப்பு கல்லீரல் உருவாவதில்த் தாக்கம் செலுத்துகின்றன . அதிகளவு உடற்பருமன், அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், போதியளவு உடற்பயிற்சி இன்மை, நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்ற நோய்கள் மற்றும் சில மருந்துகளின் பாவனையாலும் கொழுப்பு கல்லீரல் ஏற்படலாம்.

பெரும்பாலும் கொழுப்பு கல்லீரல் ஆனது அதன் ஆரம்ப கட்டத்தில் நோய் அறிகுறிகள் எதனையும் காட்டமாட்டாது. எனினும் நோயின் தீவிரம் அதிகரிக்கும் பொழுது வயிற்றில் குறிப்பாக வலது பக்க மேல் மூலையில் வலி அல்லது காற்று நிறைந்தது போன்ற உணர்வு, பசி இன்மை, குமட்டல் போன்ற உணர்வு, மஞ்சள்காமாலை, வயிற்றுப் பகுதி வீங்கியது போன்ற உணர்வு, கால்களில் வீக்கம், சோர்வுத் தன்மை போன்றவை ஏற்படலாம்.

இதனைக் கண்டறிவதற்கு ஸ்கான் பரிசோதனைகள் மற்றும் லிவர் என்சைம் டெஸ்ட் அதாவது கல்லீரலில்க் காணப்படும் நொதியம் சார்பான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

இதனை குணப்படுத்துவதற்கு பலவித ஆயுர்வேத சிகிச்சைகள் உபயோகத்தில் உள்ளன . அவற்றில் மூலிகைக் கசாயம் மிக முக்கியமானதாகும். இதில் கொழுப்பினைக் கரைக்கக் கூடிய பல மூலிகைகள் அடங்கியுள்ளன . இவற்றினைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் கொழுப்பு கல்லீரலினைக் குணப்படுத்த முடியும். மேலும் இவற்றுடன், க்வாதம், அரிஸ்டம், ஆஸவம், குளி, வட்டி, கல்கம், சூரணம் போன்ற உள்ளக மருந்துகளும் உள்ளன. இவற்றிற்கு மேலாக , உடலினை அகத்தில் இருந்து தூய்மைப்படுத்தக் கூடிய பஞ்சகர்ம முறைகளும் உள்ளன . இவற்றின் மூலம் நமது உடலானது அகத்திலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டு உடலின் செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்படும். இவற்றுடன் மருத்துவ பத்து, எண்ணெய்கள், ஒத்தடம் போன்ற வெளியக சிகிச்சை முறைகளும் காணப்படுகின்றன .

இக் கொழுப்பு கல்லீரல் ஆனது ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் ஏதும் காட்டா விடினும், முறையான கட்டுப்படுத்தல் இல்லாவிடில் கல்லீரல் சிரோசிஸ் போன்ற பாரிய விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. எனவே, இந் நோயினை வரும் முன் காப்பதோடு, வந்த பின்னும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக முறையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு அடங்கிய உணவுகளைத் தவிர்த்திட வேண்டும். முறையான உடற்பயிற்சியில்த் தினமும் ஈடுபட வேண்டும். நமது உடற் பருமனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். கொலஸ்டிரால், நீரிழிவு போன்ற நோய்கள் உடம்பில்க் காணப்படின் அதற்கான மருந்துகளை சரியாக எடுக்க வேண்டும். அனைத்தையும் விட மதுபானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொழுப்பு கல்லீரலில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எனவே, இன்றே நமது பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி கொழுப்பு கல்லீரலில் இருந்து எம்மைப் பாதுகாத்திடுவோம்.

Leave a Reply