loader

சிறுநீரகத் தொகுதியில் உருவாகும் பொதுவானதொரு நோயே சிறுநீரகக் கல் ஆகும். சிறுநீரகக் கல் ஆனது சிறுநீர் செறிவு அடைவதினாலேயே ஏற்படும். இங்கு உப்புக்கள் மற்றும் தாதுக்களின் படிவினால் கல் போன்ற படிவு உருவாக்கப்படும். இது சிறுநீரகத் தொகுதியின் எப்பாகத்திலும் உருவாகலாம். ஆண், பெண் என இருபாலரிலும் ஏற்படும் பொதுவான நோயாகும்.

சுற்றாடல்க் காரணிகள் மற்றும் பரம்பரைக் காரணிகளே சிறுநீரகக் கல் உருவாவதில்த் தாக்கம் செலுத்துகின்றன. அதிலும் குறிப்பாக , அதிக வெப்பமான காலநிலை, போதியளவு நீர் அருந்தாமை, நீண்ட நேரம் வெயிலில் நிற்பது போன்றவற்றினால் நீரிழப்பு ஏற்பட்டு சிறுநீர் செறிவாகி சிறுநீரகக் கல்லினை உருவாக்குகின்றது. இவற்றைத் தவிர , அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக உடற் பருமன், உடலில்க் காணப்படும் சில நோய்கள், மற்றும் சில மருந்துகளின் பாவனையின் காரணங்களாலும் சிறுநீரகக் கல் ஏற்படலாம்.

சிறுநீரகக் கல்லின் அளவைப் பொருத்து அது ஏற்படுத்தும் தாக்கம் மாறுபடும். அது அளவில் சிறியதாக இருப்பின், பெரும்பாலும் சிறுநீர் கழிக்கும் போதே வெளியேறிவிடும். இல்லையேல், வயிற்றின் பக்கங்கள் அல்லது இடுப்பு மற்றும் நாரி (சிறுநீரக அமைவிடத்தைச் சூழ) பகுதியில் கூரிய வலி, வலி அரைப் பகுதி அல்லது அடிவயிற்றுப் பகுதிக்கு கடத்தப்படுவது போன்ற உணர்வு (இங்கு ஏற்படும் வலியானது கல்லின் இருப்பிடம் மற்றும் அதன் அசைவினைப் பொருத்து வேறுபடும்), அமரும் பொழுது வலி உணர்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிவுத் தன்மை, சிறுநீரில் நிறமாற்றம் அல்லது துர்நாற்றம் வீசுதல், சிறுநீருடன் குருதி வெளியேறுதல், குமட்டல், வாந்தி, சிறுநீர் கழிப்பதற்கான கடுமையான உந்துதல் காணப்படல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைந்து அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பல தீவிரமான தாக்கங்ளையும் ஏற்படுத்தக்கூடியது. இங்கு தொற்று ஏற்பட்டிருப்பின் காய்ச்சல், நடுக்கம் போன்றவையும் காணப்படலாம். எனவே, உரிய நேரத்தில் சிறுநீரகக் கல்லிற்கான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

சிறுநீரகக் கல்லினைத் தீர்த்து வைக்கக்கூடிய பல இயற்கைத் தீர்வுகள் ஆயுர்வேதத்தில் உள்ளன . இதில் உள்ளக மருந்துகளாக சிறுநீரகக் கல்லினை இயற்கையாகவே கரைக்கவல்ல மூலிகைகளினால் (சாரணை, தேங்காய்ப்பூ கீரை, நெரிஞ்சி, சீந்தில் போன்றவை) ஆன கசாயம், குளி, வட்டி, சூரணம் போன்றவை காணப்படுகின்றன . மேலும் இவற்றைத் தவிர ; லேபம், பிச்சு, வஸ்தி, ஸ்நேகம், ஸ்வேதம் போன்ற வெளிப்புற சிகிச்சைகளும் உள்ளன.

சிறுநீரகக் கல்லானது மீண்டும் மீண்டும் உருவாகக் கூடியது ஆதலால், அதனைத் தவிர்க்கும் வழிமுறைகளைப் பின்பற்றுதல் கட்டாயமாகும். அதில் முக்கியமாக தினமும் போதியளவு நீர் பருகிட வேண்டும், சிறுநீரினை அடக்கி வைப்பதினைத் தவிர்க்க வேண்டும் இவற்றைத் தவிர அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் அதிக நீரிழப்பு என்பவற்றினைத் தவிர்க்க வேண்டும். மேலும் நெரிஞ்சி, தேங்காய்ப்பூ கீரை, சாரணை போன்றவற்றை அவித்து எடுக்கப்பட்ட நீர், சாம்பல் வாழை தண்டின் சாறு, மாதுளம் பழம் போன்றவற்றை நமது உணவுப் பழக்கவழக்கங்களில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகக் கல்லிலிருந்து விடுபட முடியும்.

Leave a Reply