
இஞ்சி
அனைவரது வீட்டிலும் பொதுவாகக் காணப்படும் மருத்துவ குணமிக்க ஒரு மூலிகையே இஞ்சி ஆகும். உலர் நிலையில் சுக்கு என்றழைக்கப்படும். உலர் நிலை மற்றும் பச்சை இரண்டுமே பல செயல்களை செய்கின்றது. இவை பல விதமான காய்ச்சல், இருமல், சளிப் பிரச்சணை, வயிற்று வலி, சமிபாட்டுப் பிரச்சனைகள், மூச்சுக் கஷ்டம், வயிற்றோட்டம், பசியின்மை, வாந்தி, மூட்டு வியாதி போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கக் கூடியது.
மிளகு
மிளகு பலரும் அறிந்தது போல் சமிபாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது. இதைத் தவிர , மூட்டு வாதம், காய்ச்சல், இருமல், தொண்டைக் கோளாறுகள், சில தோல் வியாதிகள், கண் நோய்கள், வீக்கம், அதிக உடற் பருமன் போன்றவற்றிற்கும் தீர்வு தரக் கூடிய பல குணங்களை உடையது.
மஞ்சள்
பலவிதமான சிறப்பம்சங்களை உடையதே மஞ்சள் ஆகும். இது கிருமிகள் மற்றும் நுண்ணங்கிகளில் இருந்து பாதுகாப்புத் தரக்கூடியது என்பது பலரும் அறிந்ததே. இதைத் தவிர புற்றுநோய்களில் இருந்தும் பாதுகாப்புத் தரக்கூடியது. காயங்களை ஆற்றுதல், சளிப் பிரச்சனை, வீக்கம், மூட்டு வியாதிகள் போன்றவற்றிற்கும் தீர்வு தரக்கூடியது.
ஏலம்
பொதுவாக நமது உணவுகளில்ப் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியமே ஏலம் ஆகும். வாசனைக்காகவே பிரதானமாகப் பயன்படுத்தப்படினும், குளிர்மையான உணர்வைத் தரக் கூடியது. மேலும், சமிபாட்டுக் கோளாறுகள், இதய வலுவாக்கி, சளி நீக்கி போன்ற செயற்பாடுகளையும் உடையது.
கறுவா
உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியமாகும். வாசனையைத் தவிர பல செயற்பாடுகளை உடையது. பல நுண்ணங்கிகளில் இருந்து பாதுகாப்புத் தரக் கூடியது. மேலும், சமிபாட்டுத் தொகுதியினைப் பலப்படுத்தக் கூடியது. அத்துடன் வீக்கம், உயர் குருதி அழுத்தம், புற்று நோய், சீனி வியாதி, வயிற்றுக் கோளாறு போன்றவற்றில் இருந்தும் பாதுகாப்புத் தரக்கூடியது.
மல்லி
மல்லி நறுமணத்தை உண்டாக்குவதற்காக சமையல்களில் பயன்படுத்தப்படும் பொருளே மல்லி ஆகும். வாசனையைத் தவிர சமிபாட்டிலும் பெரிதும் உதவுகின்றது. இதைத் தவிர வாயுக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள், என்பவற்றைச் சீர் செய்வதுடன், குளிர்ச்சியினையும் உண்டாக்குகின்றது. உணவுகளில் சுவையையும் அதிகரித்து மேலும், குமட்டல், வயிற்றோட்டம், தலைவலி, போன்றவற்றைத் தீர்ப்பதுடன் பசியினையும் உண்டாக்குகின்றது.
கறிவேப்பிலை
பொதுவாக வாசனையைத் தருவதற்காக சமயல்களில்ப் பயன்படுத்தப்படும் திரவியமாகும். கூந்தல் வளர்ச்சி மற்றும் கூந்தலின் கருமையில் பங்கு கொள்கிறது என்பது பலரும் அறிந்ததே. இதைத் தவிர , வயிற்றோட்டம், சீனி வியாதி, குமட்டல், அதிக கொழுப்பு, சமிபாட்டுப் பிரச்சனை, அதிக உடற் பருமன் போன்றவற்றிற்கும் தீர்வு தரக்கூடியது. மேலும் கண் பார்வை, ஈரல், குருதி ஓட்டம் என்பவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் உதவுகின்றது. விஷத்தினை முறிக்கும் இயல்பினையும் கொண்டுள்ளது.
வெந்தயம்
வயிற்றுக் கோளாரிகளிற்கு நமது வீடுகளில்ப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருளே வெந்தயம் ஆகும். இது தினமும் நமது சமயல்களில்ப் பயன்படுத்தப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இது சூட்டைத் தணிவிக்கக் கூடியது. மேலும், சீனி வியாதி, அதிக கொழுப்பு, மாதவிடாய் வலி, வீக்கம் போன்றவற்றிற்கும் தீர்வு தரக்கூடியது. அத்துடன் கூந்தல் வளர்ச்சி மற்றும் அதன் புத்துணர்ச்சி பேணுதலிலும் பங்கு கொள்கிறது.
பெருங்காயம்
குழந்தைகளின் கைகளில்ப் பலர் கிருமி தொற்று மற்றும் நுண்ணங்கித் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இதை அணிவர். இது கிருமி தொற்று மற்றும் நுண்ணங்கித் தொற்றிலிருந்து பாதுகாப்புத் தருவதோடு, இதய நோய்கள், சீனி வியாதி, புற்று நோய், வீக்கம், உயர் குருதி அழுத்தம், சமிபாட்டுப் பிரச்சனைகளிற்கும் தீர்வு தரக்கூடியது.
கராம்பு
பலவித மருத்துவ குணங்களுடையதே கராம்பு ஆகும். இது சிறந்த ஒரு வாசனைத் திரவியமாகக் கருதப்படுகின்றது. இதைத் தவிர சளி, மற்றும் வாந்தி போக்கியாகவும் திகழ்கிறது. மேலும் பலவித பல் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கின்றது. வாயுக் கோளாறு, வயிற்றுக் கோளாறுகளிற்கும் தீர்வு தரக்கூடியது. இதைத் தவிர முக்கியமாக கிருமிகளிற்கு எதிராகத் தொழிற்படக் கூடியது.
கடுகு
கடுகு என்பது சாதரணமாக நாம் உணவில் பயன்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இது உணவு சமிபாடு முதல் பலவகைகளில் நமக்கு உதவி புரிகிறது. சமிபாட்டினை ஊக்குவிக்கக் கூடியது. மேலும், வலி நிவாரணி, சிதல் குறைப்பு, கிருமித் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு போன்ற சில செயற்பாடுகளையும் உடையது.
பழப்புளி
பழப்புளி பொதுவாகவே நமது உணவுகளில்ப் பயன்படுத்தப்படும் ஒருவித சுவையூட்டி எனினும், சுவையைத் தவிர பல நன்மைகளை நமக்குத் தருகின்றது. குறிப்பாக இதன் பழமானது நமது சமிபாட்டுத் தொகுதியிலேயே அதிகம் செயற்பாடுடையது. நமது சமிபாட்டு சக்தியின் அளவினை அதிகரிப்பதுடன் மலத்தினை இளக வைக்கின்றது. இதனால், மலச்சிக்கல், குத நோயினால் பாதிக்கப்பட்டோரிற்கு உகந்தது. மேலும், வயிறு கோளாறு, வாந்தி, கண் பிரச்சனைகளையும் தீர்க்கும் குணமுடையது.