loader

சிறுவர் முதல் பெரியோர் வரை பொதுவாகப் பாதிக்கப்படும் நோயே பீனிசம் ஆகும். இது பொதுவான பிரச்சனை எனினும் ஏனோ பலராலும் இதற்கான முழுமையான தீர்வு எட்டப்படுவதில்லை. காரணம் நோய் பற்றிய அறிவின்மை அல்லது அதற்கான தீர்வு பற்றிய அறிவின்மை ஆகும். முதலில்ப் பீனிசம் என்றால் என்ன என்று நோக்குவோம்.

பீனிசமானது ஒரு சில ஒவ்வாமைக் காரணிகளால் ஏற்படுகின்றது. இக் காரணிகள் மூலம் நமது உடலில்க் காணப்படும் நோய் எதிர்ப்பு தொகுதியின் செயற்பாட்டில் அதிகரிப்பு ஏற்படும். இவற்றின் காரணமாக மூக்கின் மென்சவ்வில் அழற்ச்சி ஏற்படும். இதுவே பீனிசமாக உருவெடுக்கின்றது.

பரம்பரைக் காரணிகள் மற்றும் சுற்றாடல்க் காரணிகளாலேயே இந் நோய் ஏற்படும். இங்கு பரம்பரைக் காரணிகள் எனப்படுவது யாதெனில் ஒரு நோயானது பரம்பரை வாயிலாகக் கடத்தப்படுவதாகும். அதாவது தந்தை வழி அல்லது தாய் வழி உறவுகள் மூலம் ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததியிற்குக் கடத்தப்படுவதாகும். மேலும் சுற்றாடல்க் காரணிகள் எனப்படும் போது ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் அதாவது மகரந்தம், செல்லப் பிராணிகளில் இருந்து வரும் மாசு, தூசுக்கள், இரசாயனப் பதார்த்தங்கள் என்பன அடங்கும். இவற்றைத் தவிர காலநிலை மாற்றங்கள், வளிமண்டலம் மாசடைதல், சில உணவுப் பழக்கங்கள், சலம், மலம் என்பவற்றை அடக்குதல், கவலை, பயம் போன்ற மன நிலை மாற்றங்கள் என்பனவும் இவ் நோய் உருவாவதில்த் தாக்கம் செலுத்துகின்றன .

அடுத்து பீனிசத்தின் அறிகுறிகளை நோக்குவோம். இங்கு மூக்கு ஊதியது போன்ற உணர்வு, தடிப்பற்ற மூக்கு நீர் வடிதல், மூக்கில் இருந்து வெப்பக் காற்று வருவது போன்ற உணர்வு, மூக்கு, கண், காதுகளில்க் கடிப்பது போன்ற உணர்வு, மூக்கடைப்பு, மணம் அறியாமை, சுவை அறியாமை, கண்களில் நீர் வடிதல், கண் இமைகள் வீங்குதல் போன்றவை ஏற்படும். பெரும்பாலும் இவ் அறிகுறிகள் காலைப் பொழுதிலேயே அதிகம் காணப்படும்.

பல சமயங்களில் பீனிசம் மற்றும் தடிமன் என்பன தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. இவை இரண்டும் பல சமயங்களில் பொதுவான அறிகுறிகளைக் காட்டினாலும் இரண்டும் வேறு வேறு நோய்களே. பீனிசமானது பரம்பரை வாயிலாகக் கடத்தப்படக் கூடியதாகும். எனினும் தடிமனானது பரம்பரை வாயிலாகக் கடத்தப்படமாட்டாது. மேலும் தடிமனின் போது உடல் வெப்பநிலை அதிகரிப்பு, உடல் வலி, துர்நாற்றம் வீசக்கூடிய தடிப்பான மூக்கு நீர் வடிதல் என்பன காணப்படும். எனினும் இவ் அறிகுறிகள் பீனிசத்தில்க் காணப்படமாட்டாது. ஆனால், தடிமனிற்கு பொருத்தமான நேரத்தில் சிகிச்சை பெறப்படாத பட்சத்தில் அது பீனிசமாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

பீனிசத்திற்கு பொருத்தமான வேளையில் சிகிச்சை பெறாவிட்டால், அது நாளடைவில் மூக்கில் கட்டிகள், இளுப்பு, செவிப்புலன் குறைதல், கல் பீனிசம் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, பீனிசத்திற்காக பொருத்தமான வேளையில் சிகிச்சை பெறுதல் முக்கியமானதாகும்.

பல நூற்றாண்டு தொன்மையைக் கொண்ட ஆயுர்வேதத்தில் பீனிசத்திற்கான மருத்துவங்கள் பல காணப்படுகின்றன. அதில் உள்ளக மருந்துகளாக பீனிசத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய அரிஸ்டம், ஆசவம், கஷாயம், வட்டி, சூரணங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்நேகம், ஸ்வேதம், வமணம், விரேசணம், தூமபானம், கண்டூசம், கவலக்ரக , சிரோ விரேசணம், நசியம் போன்ற வெளியக சிகிச்சைகள் மூலமும் பீனிசத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் உள்ளன.

எந்த நோயானாலும் அதற்கான முதற் தீர்வு அதை ஏற்படுத்தும் காரணிகளைத் தவிர்ப்பதாகும். அவ் வகையில் குளிர் பானங்கள், வறண்ட இயல்பினைக் கொண்ட உணவுகள், புளிப்பான ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய உணவுகள், ஐஸ்கிரீம், தயிர் போன்ற குளிர்மையான இயல்பினைக் கொண்ட உணவுகளைத் தவிர்த்தல். இவற்றைத் தவிர குளிர் நீரில் நீராடல், மாலை வேளைகளில் நீராடல், பகல் வேளைகளில் உறக்கம், பயம், கவலை போன்ற மன உணர்ச்சிகள், சலம், மலம் என்பவற்றை அடக்குதல், குளிர் காற்றுப் படும் இடங்களில் இருத்தல் அல்லது அதிக வெப்பமான இடங்களில் இருத்தல் போன்றவற்றைத் தவிர்த்தல். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் பீனிசம் மென்மேலும் தொடர்ச்சியாக உருவாவதற்கான காரணிகள் தடுக்கப்படுகின்றன .

எனவே, மேற்கூறிய ஆயுர்வேத சிகிச்சைகள் மூலமும், நமது அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமும் பீனிசத்திலிருந்து விடுபடுவோம்.

Leave a Reply