loader

பொதுவாகப் பலரும் அவர்களது வாழ்வில் ஒரு முறையாவது மூல நோய் அல்லது அதன் அறிகுறிகளில் ஒரு சிலவற்றையாவது எதிர்கொள்கின்றனர். மூல நோய் எனப்படுவது யாதெனில், ஆசனவாயில் அல்லது மலவாசலில் ஏற்படும் மருக்கள் போன்ற வீக்கங்கள் ஆகும். இது ஆசன வாயிலில் ஏற்படுத்தப்படும் அதிக அழுத்தத்தின் காரணமாக ஏற்படும். மூல நோய் பொதுவாக இரண்டு வகைப்படும்; உட்புறம் உருவாவது மற்றையது வெளிப்புறம் உருவாவது. எனினும், சிலரில் இவ் இரண்டு வகையும் சேர்ந்து காணப்படும்.

இந் நோயானது ஆண், பெண் என இருபாலரிலும் எந்த வயதினிலும் ஏற்படக்கூடியது. எனினும், நடுத்தர வயதினிரிடையேயே பொதுவாகக் காணப்படும். மலச்சிக்கல், தொடர்ச்சியான வயிற்றுப் போக்கு, போதியளவு நார்ச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமை, போதியளவு நீர் அருந்தாமை, நீண்ட நேரம் பயணம் செய்தல் அல்லது, வசதியற்ற இருக்கைகளில் அமருதல், அதிகளவு பாரம் தூக்குதல், வயது, அதிக உடற்பருமன், பரம்பரைக் காரணிகள் போன்ற காரணிகளால் மூல நோய் ஏற்படலாம். மேலும், கருத்தரிப்பு, உரத்த அல்லது தொடர்ச்சியான இருமல், வயிற்றில் நீர்க் கோப்பு போன்ற மருத்துவ காரணங்களாலும் ஏற்படலாம்.

மூல நோயின் அறிகுறிகள் அதன் வகையைப் பொருத்தே காணப்படும். உட்புறமாகக் காணப்படும் பொழுது, அது மலம் கழிக்கும் போது அல்லது மலம் கழித்த பின்பு இரத்தக் கசிவை உருவாக்கும், வெளிப்புறமாகக் காணப்படும் போது மலவாசலில் மருக்கள் போன்ற வீக்கங்களுடன் மலம் கழிக்கும் போது அல்லது மலம் கழித்த பின்பு இரத்தக் கசிவையும் உருவாக்கும். இவற்றைத் தவிர , மலம் கழிக்கும் பொழுது வலி, ஆசன வாயிலில் எரிவுத் தன்மை, ஆசன வாயிலைச் சூழ க் கடிப்பது போன்ற உணர்வு, எரிச்சல், முழுதாக மலம் கழிக்க முடியாமை, ஆசன வாயிலில் ஈரம் போன்ற உணர்வு போன்றவை காணப்படும். மேலும், இங்கு ஏற்படும் குருதிப் போக்கினால் இரத்தச் சோகை, தலைசுற்று போன்ற பின்விளைவுகளும் ஏற்படலாம். 

சத்திர சிகிச்சையே மூல நோயிற்கான பலரும் அறிந்த தீர்வாகும். எனினும், ஆயுர்வேதத்தில் மூலநோயினை இலகுவாகக் குணப்படுத்தக்கூடிய உள்ளக மற்றும் வெளியக தீர்வுகள் பல உள்ளன . நோயின் தீவிரம் மற்றும் நோயாளியின் நிலையைப் பொருத்தே வழங்கப்படும் சிகிச்சை தெரிவு செய்யப்படும். உள்ளக மருந்துகளாக கசாயம், வட்டி, சூரணம், கல்கம், குளி போன்றவை உண்டு. வெளியக சிகிச்சைகளாக ; அக்னி கர்மம் (இது சூடாக்கப்பட்ட பல உலோகங்களினால் உருவாக்கப்பட்ட கம்பியினால் செய்யப்படும் ஒரு வித சத்திர சிகிச்சை சார்ந்த முறையாகும்), க்ஷார கர்மம் (மருத்துவ மூலிகைகளின் சாம்பலினால் தீய்தலினை உருவாக்கக் கூடிய சத்திர சிகிச்சைக்குப் பதிலாகப் பரிந்துரைக்கக் கூடிய முறையாகும்), குத வஸ்தி, லேபம், சிரா வேதனம், மூலிகைகளினால் ஆன கசாயங்களில் அமர்வு போன்ற பலவித சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன.

சிகிச்சைகளுடன் நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமும் மூல நோயிலிருந்து முற்றாகக் குணமடைய முடியும். ஒழுங்கற்ற மலங்கழித்தலே மூல நோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும். எனவே, முதலில் அதனை சீர் செய்ய வேண்டும். இதற்கு அதிகளவு நார்ச்சத்து நிறைந்த கீரைகள், கோகில கிழங்கு, வில்வம் பழம், கடுக்காய், கருணைக் கிழங்கு, பப்பாசி, வாழைப்பழம், மாதுளை போன்றவற்றைத் தினமும் நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றைத் தவிர , போதியளவு நீர் அருந்த வேண்டும், உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். மேலும், நீண்ட நேரம் பயணம் செய்தல், பொருத்தமற்ற இருக்கைகளில் அமர்தல் போன்றவற்றைத் தவிர்த்தல், சலம் மலம் என்பவற்றை அடக்குவதைத் தவிர்த்தல் என்பவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆயுர்வேத சிகிச்சைகள் மூலமும் நமது பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமும் மூல நோயினை எதுவித சத்திர சிகிச்சைகளும் இன்றிக் குணப்படுத்த முடியும்.

ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் இன்றே மூல நோயினை வென்றிடுவோம்!!

Leave a Reply